மதுரைத் திருக்கோயில்

மதுரைத் திருக்கோயில் பொ.யு 14ஆம் நூற்றாண்டிலிருந்து பலமுறை போர்த் தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளதை திருக்கோயில் சிலாசாசனங்கள், செப்பேடுகள், மதுரா விஜயம், மதுரைத் திருப்பணி மாலை, ஸ்தானீகர் வரலாறு, ஸ்ரீதால புஸ்தகங்கள், நவீன ஆய்வாளர்களின் நூல்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வரலாற்றுச் சான்றுகள் வாயிலாக அறியலாம். இவை அனைத்தும் பொது வெளியில் பலரும் காணக் கிடைக்கின்றன.

மதுரா விஜயம் அல்லது வீரகம்பராய சரிதம் என்னும் வடமொழிக் காவியத்தை இயற்றியவர் விஜயநகர சங்கம வம்சத்து மன்னர் வீரபுக்கராயருடைய திருமகனான குமாரகம்பணனின் மனைவி கங்காதேவி ஆவர்.

இவர் தமது நூலின் முற்பகுதியில் தங்களது குலகுருவான ஸ்ரீகாசீவிலாஸ க்ரியாசக்தி என்னும் வைதிக பாசுபத சைவப் பெரியாரைப் போற்றி வணங்குகிறார். இந்த க்ரியாசக்தி பண்டிதரைப் பற்றிக் குறிப்பிடும் விஜயநகர மன்னர் இரண்டாம் ஹரிஹர ராயரின் அமைச்சரான முத்தைய தண்டநாயகரின் பொ.யு 1383ஆம் ஆண்டு சிதம்பரம் திருக்கோயில் தொடர்புடைய நந்திநாகரிச் செப்பேடு தற்போது திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடத்தில் உள்ளது.

விஜயநகரத்தின் ஸ்தாபனாசார்யராக அறியப்படும் மஹான் ஸ்ரீவித்யாரண்ய ஸ்வாமிகள் பற்றி எவ்விதக் குறிப்பும் மதுராவிஜயத்தில் இல்லை; மதுரை வெற்றி, திருக்கோயில் மீட்பு மற்றும் புனரமைப்பில் ஸ்ரீவித்யாரண்ய ஸ்வாமிகள் அல்லது அரண்ய ஸம்ப்ரதாயத்தைச் சார்ந்த துறவிகள் அல்லது மடாதிபதிகள் ஆகியோர் பங்கு ஏதும் இருந்ததாகவே சொல்லப்படவில்லை என்பதுதான் நாம் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி.

இது தவிர மதுரைத் திருக்கோயிலின் பழைய ஸ்தானீகர் வரலாற்று ஆவணக் குறிப்புகளில் விஜயநகர வீரகம்பணராயரை லிங்கதாரி- வீரசைவர் என்றே சொல்லப்பட்டுள்ளதும் ஈண்டு அறியத் தக்கது.

இவற்றால் வைதிக பாசுபத ஆசார்யர் ஸ்ரீக்ரியாசக்தி பண்டித தேவர் பற்றிக் குறிப்பிடும் மதுரை மற்றும் தில்லைத் திருக்கோயில்கள் சம்பந்தமானவரலாற்றுச் சான்றுகளில் மஹான் ஸ்ரீவித்யாரண்ய ஸ்வாமிகள் பற்றி எவ்விதக் குறிப்புகளும் இல்லை என்பது போதரும்.

மதுரைத் திருக்கோயிலுக்கென பாண்டிய, நாயக்க மன்னர்கள் காலத்தில் மாடாபத்யம், ஆசார்யம் ஆகிய ஸ்தானங்களில் பரம்பரையாக பல ஆர்ய, கௌட, த்ராவிட தேச அந்தணர்கள் தொடர்ந்து இருந்துள்ளனர். நாயக்க மன்னர்களின் ராஜகுரு ஸ்தானத்தில் பஞ்சஸ்தல கர்த்தர்கள் என்னும் திருவானைக்கா தீக்ஷிதர்கள் இருந்துள்ளனர். இவர்களே ராமேச்வரத்து அர்ச்சகர்களுக்கும் தீக்ஷாகுரு ஆவர்.

மதுரைத் திருக்கோயில் மரபுடன் நெருங்கிய தொடர்புடைய இந்த அந்தணர் பரம்பரையினர் எவருக்கும் ஸ்ரீவித்யாரண்ய ஸ்வாமிகள் அல்லது அவரால் கர்நாடகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட எட்டு மடங்களின் ஆசார்யர்களுடன் வரலாற்றில் எவ்விதத்திலும் தொடர்பு இருந்ததாக இதுகாறும் ஆய்வாளர்களால் கண்டறியப்படவில்லை.

இத்திருமடங்களின் குருபரம்பரை நூல்களிலும் அவ்விதம் சொல்லப்படாத நிலையில் ஸ்ரீவித்யாரண்ய ஸ்வாமிகளையும், மதுரைத் திருக்கோயிலையும் தொடர்புபடுத்தி புதிய வரலாற்றைக் கட்டமைப்பது பண்டைய சரித்திரச் சான்றுகளுக்கு முரணானதாகும்.

ஆனால் மதுரைத் திருக்கோயிலுக்கும் அவருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறித் தமக்கு இணக்கமான குறிப்பிட்ட சமய நிறுவனத்தின் வரலாற்றுடன் மதுரை நகரம் அல்லது மதுரைத் திருக்கோயிலை இணைத்து செய்திகளை வெளியிடுவோர் எவரும் அதற்குரிய மூல ஆவணங்களையும் காட்டவேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது.

அவ்விதமான சான்றுகள் காட்டப்படாத நிலையில், மஹான் ஸ்ரீவித்யாரண்ய ஸ்வாமிகளின் அருள் வரலாற்றில் இல்லாத இத்தகைய பிற்காலச் சித்தரிப்புகளை வளமான கற்பனைக் கதைகளாகவே தமிழக வரலாற்றாய்வாளர் கருதுவர்.