காலடியின் உண்மை வரலாறு…7

2532ஆவது ஸ்ரீசங்கர ஜயந்தி விசேஷ வெளியீடு – காலடியின் உண்மை வரலாறு…7 (1910 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த கட்டுரையிலிருந்து)

அச்சமயங்களில் ஸ்ரீமத் ஆதிசங்கராசார்ய ஸ்வாமிகளுக்கு அவ்விடத்தில் ஓர் ஆலயமும், மடமும் பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்கிற அவருடைய ( நடுக்காவேரி ஸ்ரீநிவாஸ சாஸ்திரியார்) பிரார்த்தனையைக் கேட்டிருப்பவர் அநேகர் உளர்.

காலடியில் ஒரு பிராஹ்மணர்கூட வஸிக்காமல் மிலேச்ச பூயிஷ்டமாய் இருந்ததைப்பற்றி அவர் வருந்தியதையும் அநேகர் கேள்வியுற்றிருக்கின்றனர்.

அந்தோ ! இக்காலடி க்ஷேத்திரத்தின் மஹிமையையும், ஜீவநதியாய் விளங்கும் சூர்ணீ நதிக்கரையில் அது அமைக்கப்பட்டிருக்கும் தன்மையையும், பிராஹ்மணாக்ரஹாரத்திற்கே உரித்தான அதனது ஸந்நிவேசத்தையும், அங்கு அமரிக்கையுடன் பிரஸன்னமாய் வளை ந்து பிரவஹிக்கின்ற சூர்ணி நதியின் அழகையும், அதன் கரைகளிலுள்ள மரச்சோலைகளின் வனப்பையும் வர்ணிக்க யாவரால் ஆகும்?

இவ்வதிசயங்களை யெல்லாம் கண்ணாரக் கண்டே (நடுக்காவேரி) ஸ்ரீநிவாஸ சாஸ்திரியார் அவர்கள் சென்ற விகாரி வருஷத்தில் (1899-1900) ஸ்ரீமதாசார்ய ஜயந்தி மஹோத்ஸவ ஸமயத்தில் “ஸ்ரீஜகத்குரு தாமஸேவாசதகம்” என்னும் ஓர் அழகிய பிரபந்தத்தை ஸ்ரீமதாசார்ய ஸ்வாமிகளின் ஜனன பூமியாகிய இக்காலடி க்ஷேத்திரத்தின் பெருமையைக் குறித்து எழுதியிருக்கின்றனர்.

ஆனால் ஸ்ரீசாஸ்திரியார் அவர்கள் தமது கோரிக்கை முடிவுபெறாமலே திடீரென்று விண்ணுலகம் சென்றதற்கு யாம் வருந்துகின்றோம்.

(தொடரும்)

காலடியின் உண்மை வரலாறு…6

2532ஆவது ஸ்ரீசங்கர ஜயந்தி விசேஷ வெளியீடு – காலடியின் உண்மை வரலாறு…6 (1910 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த கட்டுரையிலிருந்து)

ஆதியில் இக்காலடி க்ஷேத்திரம் ஓர் அநாதி ஸ்வயம்புலிங்க க்ஷேத்ரமாய் ஏற்பட்டிருந்ததென்றும், ராஜசேகரன் என்னும் ஓர் அரசனால் சூர்ணீ நதிக்கரையில் ஒரு பக்கத்தில் விருஷாத்ரிநாதருடைய ஆலயத்துடனும் மற்றொரு பக்கத்தில் ஸ்ரீகிருஷ்ண ஸ்வாமி ஆலயத்துடனும் ஒரு பெரிய பிராஹ்மணாக்ரஹாரமாக அமைக்கப்பட்டிருந்தது என்றும், அதனுள் வேத வேதாங்க பாரங்கதர்களான அநேகம் பிராஹ்மணோத்தமர்கள் நமது ஆசார்ய ஸ்வாமிகளின் காலத்தில் வஸித்து வந்தார்களென்றும் நாம் புஸ்தகங்களில் படித்திருக்கின்றோமே அன்றி அத்தகைய பிராஹ்மணாக்ரஹாரம் இக்காலத்தில் ஒன்றும் காணப் படவில்லை,

சுமார் பதினைந்து வருஷங்களுக்கு முன் (1895) இக்காலடி என்னும் ஊரைக் கவனித்தவருங்கூட இல்லை. முன் பிரபல அக்ரஹாரமாயிருந்த இடம் சில மாதங்களுக்கு முன்வரையில் பெருங்காடாயிருந்ததாகத் தெரியவருகின்றது.

ஏதோ தெய்வாநுகூலத்தினால் ஸ்ரீமதாசார்யஸ்வாமிகள் பால்யத்தில் திருவிளையாடல்கள் ஆடின கிருஹமும், பின்பு தமது தாயாராகிய ஆர்யாம்பாளைச் அவர் தஹனம் செய்த ஸ்தலமுமாகிய ஓர் இடம் மாத்திரம் தொன்றுதொட்டு பரம்பரையாய்க் குறிப்பிக்கப்பட்டு வந்தது.

அந்த இடத்தையும்கூட, ஊரை ஆக்கிரமித்துக் கொண்டதுபோல, அந்நிய மதஸ்தர்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கியதை கேள்வியுற்று என்ன செய்வோமென்று சில ஆரிய மதாபிமானிகள் துயரமுற்றிருக்குங்கால் ஜகதீசன் அம்சம்போல் அவதரித்திருந்த பிரஹ்ம வித்யா பத்திராதிபராய் பலகாலம் விளங்கி வந்த எமது ஆசிரியர் பிரஹ்மஸ்ரீ பரசமய பஞ்சானன பாஞ்சஜன்ய பண்டித ( நடுக்காவேரி) ஸ்ரீநிவாஸ சாஸ்திரிகள் சில கனவான்களுடன் இக்காலடி க்ஷேத்திரத்திற்குச் சென்று, ஸ்ரீமத் ஆதி சங்கராசார்ய ஸ்வாமிகளுடைய கிருஹமும் ஸ்ரீமதார்யாம்பாளுடைய தஹன ஸ்தலமுமாகிய அந்த இடத்தை மாத்திரம் வெகு பிரயாசைப்பட்டு, அந்நிய மதஸ்தர்களின் கையினின்றும் மீட்டு, அவ்விடத்தில் ஒரு குடீரமும் ஏற்படுத்தி சென்ற விகாரி வருஷம் (1899-1900) முதல் ஆசார்ய ஸ்வாமிகளுடைய பிறந்த நாளாகிய வைசாக சுத்த பஞ்சமியில், வித்வஜ்ஜனங்களைக்கூட்டி, ஆசார்யருடைய சரித்திர விஷயமாயும், அவர்கள் ஸ்தாபித்த அத்துவைத மத விஷயமாயும், பற்பல உபந்நியாஸங்களைச் செய்து ஆசார்ய ஜயந்தி மஹோத்ஸவத்தை விமர்சையுடன் தாம் உயிருடனிருந்த அளவும் நடத்தி வந்தார்கள். (தொடரும்)

May be an image of temple and text

காலடியின் உண்மை வரலாறு…5

2532ஆவது ஸ்ரீசங்கர ஜயந்தி விசேஷ வெளியீடு – காலடியின் உண்மை வரலாறு…5 (1910 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த கட்டுரையிலிருந்து)

மலையாள நாட்டில், பூர்ணாநதி என்றும், சூர்ணீநதி என்றும் வழங்கி வந்த ஆல்வாய் நதிக்கரையில் சசலகிராமமென்று வழங்கி வந்த காலடி க்ஷேத்திரத்தில் ஆத்ரேய கோத்திரத்தில் ஸ்ரீவித்யாதிராஜர் வம்சத்தில் மஹாபண்டிதராய் அவதரித்த ஸ்ரீசிவகுரு என்னும் பிராஹ்மணோத்தமருக்கு, அவர்களுடைய தர்மபத்னியாகிய ஸ்ரீமதார்யாம்பாளின் பவித்திரமான கர்பத்தில் வர்த்தமான கலியுகாப்தம் 2593-ம் வருஷத்துக்குச் சரியான கி.மு. 509-ம் வருஷம், நந்தன ஸம்வத்ஸரம், உத்தராயணம், வைசாக மாஸம், சுக்ல பக்ஷம், பஞ்சமி திதி, புநர்வஸூ நக்ஷத்திரம், தநூர் லக்னம் கூடிய இந்தச் சுபதினத்தில் ஸ்ரீமத் ஆதிசங்கராசாரிய ஸ்வாமிகள் அவதரித்தார் என்பது பிராசின சங்கர விஜயத்தாலும், பிருஹத் சங்கர விஜயத்தாலும், குருரத்ன மாலிகையாலும், புண்யச்லோக மஞ்சரியாலும், ஸுஷும்னையாலும், ஜினவிஜயத்தாலும், ராஜதரங்கிணியாலும், கதாஸரித்ஸாகரத்தினாலும், பதஞ்ஜலி விஜயத்தாலும், விமர்ச கிரந்தத்தினாலும், துவாரகாதி பீடங்களின் குரு பரம்பரைகளாலும், ஸ்ரீஸுதந்வ ஸார்வபௌம தாம்ரபத்ர சாஸனத்தினாலும், இன்னும் பற்பல பிரமாணங்களாலும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் யாவருக்கும் விளங்கும்.

ஆகவே இம்மஹாபுருஷருடைய பெயரையும், புகழையும் கொண்டாடுவதற்கு இவர்களது ஜன்ம பூமியாகிய காலடி க்ஷேத்திரத்தில் ஆலயமும், மடமும் அமைத்து அவர்களது பெருமைக்கேற்ற பிரதிஷ்டை ஒன்று செய்ய வேண்டுமென்று ஆரிய மதாபிமானிகளின் மனதில் வெகுநாளாக ஓர் எண்ணம் குடிகொண்டிருந்தது.

ஆனால் இக்காலடி என்னும் க்ஷேத்திரம் எங்கே இருக்கின்றது, எந்த ஸ்திதியில் இருக்கிறது என்பது கூட ( கேரள தேசவாசிகள் அல்லாதோர்) பலருக்கும் தெரியாமலிருந்தது. (தொடரும்)

காலடியின் உண்மை வரலாறு…4

2532ஆவது ஸ்ரீசங்கர ஜயந்தி விசேஷ வெளியீடு – காலடியின் உண்மை வரலாறு…4 (1910 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த கட்டுரையிலிருந்து)

இவைகள் பெரும்பாலும் கலியுகம் 2593-வாக்கில் காலடியில் ஸ்ரீசிவகுருவுக்கும் ஆர்யாம்பாளுக்கும் பிறந்து, பூமியில் முப்பத்திரண்டு வருஷமிருந்து துவாரகையிலும், பதரிகாச்ரமத்திலும், சிருங்ககிரியிலும், ஜகந்நாதத்திலும் காளிகாபீடம், ஜ்யோதிஷ்மதீபீடம், சாரதாபீடம், விமலாபீடம் என்னும் நான்கு பீடங்களை ஏற்படுத்தி அவற்றில் தமது சிஷ்யர்களாகிய பத்மபாதரையும், தோடகாசார்யரையும், விச்வரூபாசார்யரையும், ஹஸ்தாமலகரையும் ஸ்தாபித்து, ஸ்ரீகாஞ்சியில் தமக்காக ஸ்ரீ காமகோடி பீடத்தையும் ஸ்தாபித்து, ஸ்ரீகாஞ்சியில் ஸ்ரீகாமாக்ஷி அம்மன் ஸந்நிதியில் கலியுகம் 2625-ம் வருஷத்தில் தேஹத்தியாகம் செய்த ஸ்ரீமத் ஆதிசங்கராசார்யருடைய சரித்திரத்தையும், கலியுகம் 3889-ம் வருஷம் சிதம்பரத்தில் விச்வஜித் ஸோமயாஜிக்கும் விசிஷ்டாதேவிக்கும் பிறந்து ஸ்ரீகாமகோடி பீடத்தில் 38-வது ஆசார்யராய் விளங்கி, பற்பல அற்புதக் கிரந்தங்களை இயற்றி ஸ்ரீமத் ஆதிசங்கராசார்யரைப்போல் திக்விஜயம் செய்து பட்டோத்படவாக்பதி, அபிநவகுப்தர், முதலிய வித்வான்களை ஜயித்து, ஷண்மத ஸ்தாபனஞ் செய்து, ஸ்ரீகாச்மீரத்தில் ஸர்வஜ்ஞபீடம் ஏறி, தத்தாத்திரேயர் குஹைக்குச் சென்று, தமது 52-வது வயதில் கலியுகம் 3941-ம் வருஷத்தில் கைலாயஞ் சென்று சீனர்களாலும், துருஷ்கர்களாலும் பாஹ்லீகர்களாலும் பரமாசார்யராக மதிக்கப்பட்டிருந்த அபிநவ சங்கராசார்ய சரித்திரத்தையும் கலந்து காலதேச வர்த்தமாநங்களை உணராது எழுதப்பட்ட கிரந்தங்களே.

இவைகளன்றியும் ஸ்ரீகாஞ்சீ குருபரம்பரை, ஸ்ரீசிருங்கேரி குருபரம்பரை, ஸ்ரீதுவாரகா குருபரம்பரை, புண்ணிய ச்லோகமஞ்ஜரி, ஸுஷும்னை, சிவரஹஸ்யம், பத்மபுராணம், ஸ்காந்த புராணம், விமர்சம், பதஞ்ஜலி விஜயம், ராஜ தரங்கிணி முதலிய கிரந்தங்களிலும், ஜினவிஜயம், மத்வவிஜயம், மணிமஞ்ஜரி முதலிய அந்நிய மதஸ்தர்களின் கிரந்தங்களிலும் ஸ்ரீஆதி சங்கராசார்யருடைய சரித்திரத்தையும் ஸ்ரீஅபிநவ சங்கராசாரியருடைய சரித்திரத்தையுங் கலந்து எழுதப்பட்ட ஓர் வகை சரித்திரமும் இருக்கின்றது,

ஆகலின் ஸ்ரீமத் ஆதிசங்கராசார்யருடைய திவ்விய சரித்திரத்தைப்பற்றி இங்கு விரிவாய் எழுதுவது அனாவசியமே.

காலடியின் உண்மை வரலாறு…3

2532ஆவது ஸ்ரீசங்கர ஜயந்தி விசேஷ வெளியீடு – காலடியின் உண்மை வரலாறு…3 (1910 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த கட்டுரையிலிருந்து)

இத்தன்மைய அமாநுஷப் பிரஜ்ஞையோடு கூடிய ஸ்ரீமத் ஆதிசங்கராசார்ய ஸ்வாமிகளுடைய சரித்திரத்தைப் பற்றி அநேக கிரந்தங்கள் இருக்கின்றன.

அவற்றுள் ஸ்வாமிகளுடைய முக்கிய ஆசார்ய சிஷ்யர்களான ஸ்ரீசித்ஸுகாசார்யர், ஸ்ரீமதாநந்தகிரி யதீந்திரர் இயற்றிய பிராசீன சங்கரவிஜயமும், பிருஹத் சங்கர விஜயமுமே புராதனமாயும் பிராமாணிகமாயும் உள்ளவைகள்.

பிறகு ஸ்ரீவியாஸாசல கவியினால் இயற்றப்பட்ட வியாஸாசலீயம் என்னும் சங்கராப்யுதயமும், ஸ்ரீகோவிந்தநாதரால் இயற்றப்பட்ட கேரளீய சங்கர விஜயம் என்னும் ஆசார்ய சரித்திரமும், அனந்தானந்த கிரியினால் இயற்றப்பட்ட குருவிஜயமும், ஸ்ரீஸதாசிவ பிரஹ்மேந்திரரால் இயற்றப்பட்ட குருரத்நமாலிகையும் மத்திய காலத்தில் ஏற்பட்ட கிரந்தங்கள்.

ஸ்ரீசித்விலாஸ யதீந்திரர் இயற்றியதாக அச்சிடப்பட்ட சங்கரவிஜய விலாஸமும், ஸ்ரீமாதவாசாரியர் பெயரால் அபிநவகாளிதாஸர் இயற்றிய சங்கர திக்விஜய காவ்யமும், ஸ்ரீஸதாநந்த ஸ்வாமிகளால் இயற் றப்பட்ட சங்கரதிக்விஜய ஸாரமும், அவை களின் வியாக்யானமாகிய ஸ்ரீசங்கராசார்ய விஜயடிண்டிமமும், அத்வைத ராஜ்யலக்ஷ்மியும், துந்துபியும், தற்காலத்து மட அபிமானிகளால் இயற்றப்பட்ட கிரந்தங்களே.

காலடியின் உண்மை வரலாறு…2

2532ஆவது ஸ்ரீசங்கர ஜயந்தி விசேஷ வெளியீடு – காலடியின் உண்மை வரலாறு…2 (1910 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த கட்டுரையிலிருந்து)

“அவர்களின் (ஸ்ரீசங்கர பகவத்பாதர்களின்) மனத்தின் பெருமையும், ஹ்ருதயத்தின் காம்பீர்யமும், எண்ணத்தின் உறுதியும், விஷயங்களை எடுத்துரைப்பதில் அவர்களின் பக்ஷபாதமின்மையும், அவர்களின் தெளிவான நடையும், இவைகள் ஒவ்வொன்றுமே நமக்கு அவர்களிடத்துள்ள கெளரவத்தை அதிகரிக்கச் செய்கின்றது” என்று விசிஷ்டாத்வைதியான பாஷ்யாசாரியர் என்னும் ஓர் பண்டிதர் (Age of Sankaracharya) *சங்கராசாரியர்காலம்” என்னும் ஆங்கில கிரந்தத்தில் கூறியுள்ளார்.

விஷயங்களை யுள்ளவாறுணர்ந்து தத்துவாராய்ச்சி செய்வதிலும், பூர்வபக்ஷோபந்நியாஸ பூர்வகமாய் நியாயப் பிரமாணங்களைக்கொண்டு ஸித்தாந்தஞ்செய்வதிலும், உள்ளத்திற் கருதியதை யாவருங் கேட்ட மாத்திரத்தில் ஐயந்திரிபின்றி எளிதிலறிந்து கொள்ளும்படி தக்க மொழிகளைக்கொண்டு எடுத்துரைப்பதிலும் இவர்கள் இயற்றிய கிரந்தங்களுக்கு நிகரான கிரந்தத்தை ஸம்ஸ்கிருத பாஷையிலாயினும் மற்ற பாஷைகளிலாயினும் யாம் இதுவரை கண்டதில்லை, இம்மஹான்களுடைய அவதார விசேஷமும், இவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட அத்துவைத தர்சநத்தின் மஹிமையும், இவர்கள் தாம் பூமியில் ஜீவித்திருந்த முப்பத்திரண்டு வயதிற்குள்ளாக இயற்றிய ஸர்வோத்தமமான கிரந்தங்களும், புரிந்த அத்புதமான கிருத்தியங்களும், இவைகள் ஒவ்வொன்றுமே இம் மஹாபுருஷர் ஸ்ரீபரமாத்மாவின் ஓர் விசேஷ அவதாரமென்பதைத் தெள்ளென விளக்கும்.

காலடியின் உண்மை வரலாறு..1

ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதர் அவதரித்த காலடித் தலம் பற்றி முதன்முதலாக எவரால் உலகறிய பிரசாரம் செய்யப்பட்டது?

யார் அங்கு முதன்முதலாக சிறு கோயில் ஒன்றை எழுப்பினார்?

பிறகு எங்ஙனம் திருவிதாங்கூர் மன்னர் ஆதரவுடன், சிருங்கேரி மடத்தார் அங்கு மேற்படி ஸ்தலத்தில் ஏற்கனவே இருந்த கட்டுமானங்களை விஸ்தரித்தும், புதுப்பணிகளையும் செய்தனர்? என்பனவற்றைச் சுருக்கமாகவும், ஆதாரங்களுடனும் விளக்கும் 1910ஆம் ஆண்டுக் கட்டுரை ஒவ்வொரு பகுதியாக இங்கு வெளியிடப்படுகிறது. இவற்றின் ஆங்கில மொழியாக்கமும், மூலக்கட்டுரை முழுமையும் விரைவில் வெளியிடப்படும்.

அக்காலத்தில் மிகப் பிரபலமாக இருந்த தமிழ் மாத இதழில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் T.S.நாராயண சாஸ்த்ரி அவர்கள் எழுதிய இக்கட்டுரை 2532ஆவது ஸ்ரீசங்கரஜயந்தி தினத்தில் வெளிவருவது பொருத்தமே.

காலடி க்ஷேத்திரமும் ஸ்ரீஆதிசங்கராசார்ய மூர்த்தி பிரதிஷ்டையும்

(ADI SANKARA’S TEMPLE AT KALADI)

இக்காலடி க்ஷேத்திரம் ஸ்ரீமத் ஆதிசங்கராசார்ய ஸ்வாமிகள் திருவவதாரமெடுத்த புண்ணிய ஸ்தலமென்பது யாவருக்குந் தெரிந்த விஷயமே.

“க்ருதே ஸதாசிவோ விஷ்ணு:

ப்ரஹ்மா சேந்த்ரோ குரு : ஸ்ம்ருத: Ii

ராமோ வஸிஷ்டோ துர்வாஸா :

வால்மீகிச்ச த்விதீயகே II

சக்தி: பராசரோ வ்யாஸ:

ஸ்ரீக்ருஷ்ணோ த்வாபரே யுகேI

கலௌ சகோ கௌடபாதோ

கோவிந்தச் சங்கரார்யக: II

என்று ‘பிருஹத் சங்கர விஜயத்தில்’ கூறியிருப்பதுபோல், ஸதாசிவன், விஷ்ணு, பிரஹ்மா, இந்திரன் கிருதயுகத்திலும், ஸ்ரீராமபிரான், வஸிஷ்டர், துர்வாஸர், வால்மீகி திரேதாயுகத்திலும், சக்தி, பராசரர், வியாஸர், ஸ்ரீகிருஷ்ண பகவான் துவாபரயுகத்திலும், சுகர், கௌடபாதர், கோவிந்த பகவத்பாதர், சங்கராசார்யர் கலியுகத்திலும் வேதாந்தோபதேசத்தினால் அத்துவைத ஞானத்தைத் தெரிவித்து ஸநாதந தர்மத்தை ஸ்தாபித்த பரமாசார்யர்கள் ஆவர்.

அவர்களுக்குள் ஸ்ரீசங்கராசார்ய ஸ்வாமிகளின் பெயரை அறியாதவர் இப்பூவுலகில் ஒருவருமிலர், இவருடைய புத்தி கோசரத்தைக் கண்டு மயங்கி ஆச்சரியப்படாதவர் எங்குமில்லை. தத்துவ தர்சனத்தில் இவருக்குச் சமாநமானவர் ஒருவருமில்லையென்பது நமது தேசத்துப் பண்டித சிகாமணிகளின் அபிப்பிராய மாத்திரமேயன்றி, இவருடைய பாஷ்யாதி கிரந்தங்களைப் பரிசீலனஞ் செய்த யூரோப்பு, அமெரிக்கா முதலிய மேல்

நாட்டுப் புலவர்களின் துணிபுமேயாம்.