ஸ்ரீசங்கராசார்யர் ஸ்தாபித்த ஐந்து மடங்கள் – துங்கா ச்ருங்கேரி குருவம்ச காவ்யத்தில் குறிப்பிடப்பட்ட வரலாற்றுச் செய்திகள் பற்றிய ஆய்வு (1)
துங்கா ச்ருங்கேரி மடத்தின் குருவம்ச காவ்யம் வேறெந்த சங்கர விஜய நூல்களிலும் காணப்படாததும், ஸ்ரீஆசார்யர்களின் காசி வாசத்தின்போது நடந்த நிகழ்ச்சியும் ஆகிய ஒன்றினை விசேஷமாகக் குறிப்பிடுகின்றது.
இக்காப்பியம் ஸ்ரீசச்சிதானந்த பாரதீ (பொ.யு.1706-1741 ) என்ற முன்னாள் ச்ருங்கேரி மடாதிபரின் விருப்பப்படி, இம்மடத்தின் ஆஸ்தான பண்டிதரான காசி லக்ஷ்மண சாஸ்திரி என்பாரால் சுமார் கி. பி. 1735-இல் இயற்றப்பட்டது ஆகும்.
இதில் மூன்றாம் ஸர்க்கத்தின் 23-வது செய்யுள் பின் வருமாறு:-
” வாராணஸீம் யோகிவரோதிகம்ய
புஜைரிவ ஸ்ரீஹரி ரேஷசிஷ்யை : ।
ஸஹாத்மனா பஞ்ச மடான யீஷாம்
ப்ரகல்ப்ய தஸ்த்தெள கதிசித் திநானி ।।”
இந்நூலின் முதற் பதிப்பில், ஆசிரியரே இயற்றியுள்ள உரையில், “ஸ்ரீஆசார்யர் காசியை அடைந்த பின்,ஸ்ரீபத்மபாதர் முதலிய நான்கு சிஷ்யர்களுக்காக நான்கு மடங்களையும், தனக்கென ஒன்றும், ஆக ஐந்து மடங்களை ஏற்படுத்திச் சில தினங்கள் அங்கு இருந்தனர்” என்பதாக மேற்கண்ட செய்யுளுக்குப் பொருள் சொல்லப்பட்டுள்ளது.
பின்னர் உள்ள செய்யுள்களில், ஸ்ரீசங்கர பகவத்பாதர் தமது சீடர்களுடன் தொடர்ந்து யாத்திரை செய்த விவரங்கள் காணப்படுகின்றன.
இந்த வரலாற்றை நோக்குங்கால் –
* தாம் சில தினங்கள் தங்கியிருக்க வேண்டி ஐந்து மடங்களை காசியில் ஸ்ரீஆசார்யர் நிறுவ வேண்டியதன் அவசியம் யாது ?
* அத்தினங்களில் சிஷ்யர்கள் தமது குருவிடமிருந்து பிரிந்து இருந்தார்களா?
– என்பன போன்ற வினாக்கள் நம் மனத்தில் எழுகின்றன.
(ஸ்ரீ.அ.குப்புஸ்வாமி ஐயரவர்கள் உபகரித்த சிறுகையேட்டை அடிப்படையாகக் கொண்டு இத் தொகுப்பு எழுதப்பட்டது.)