2532ஆவது ஸ்ரீசங்கர ஜயந்தி விசேஷ வெளியீடு – காலடியின் உண்மை வரலாறு…4 (1910 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த கட்டுரையிலிருந்து)
இவைகள் பெரும்பாலும் கலியுகம் 2593-வாக்கில் காலடியில் ஸ்ரீசிவகுருவுக்கும் ஆர்யாம்பாளுக்கும் பிறந்து, பூமியில் முப்பத்திரண்டு வருஷமிருந்து துவாரகையிலும், பதரிகாச்ரமத்திலும், சிருங்ககிரியிலும், ஜகந்நாதத்திலும் காளிகாபீடம், ஜ்யோதிஷ்மதீபீடம், சாரதாபீடம், விமலாபீடம் என்னும் நான்கு பீடங்களை ஏற்படுத்தி அவற்றில் தமது சிஷ்யர்களாகிய பத்மபாதரையும், தோடகாசார்யரையும், விச்வரூபாசார்யரையும், ஹஸ்தாமலகரையும் ஸ்தாபித்து, ஸ்ரீகாஞ்சியில் தமக்காக ஸ்ரீ காமகோடி பீடத்தையும் ஸ்தாபித்து, ஸ்ரீகாஞ்சியில் ஸ்ரீகாமாக்ஷி அம்மன் ஸந்நிதியில் கலியுகம் 2625-ம் வருஷத்தில் தேஹத்தியாகம் செய்த ஸ்ரீமத் ஆதிசங்கராசார்யருடைய சரித்திரத்தையும், கலியுகம் 3889-ம் வருஷம் சிதம்பரத்தில் விச்வஜித் ஸோமயாஜிக்கும் விசிஷ்டாதேவிக்கும் பிறந்து ஸ்ரீகாமகோடி பீடத்தில் 38-வது ஆசார்யராய் விளங்கி, பற்பல அற்புதக் கிரந்தங்களை இயற்றி ஸ்ரீமத் ஆதிசங்கராசார்யரைப்போல் திக்விஜயம் செய்து பட்டோத்படவாக்பதி, அபிநவகுப்தர், முதலிய வித்வான்களை ஜயித்து, ஷண்மத ஸ்தாபனஞ் செய்து, ஸ்ரீகாச்மீரத்தில் ஸர்வஜ்ஞபீடம் ஏறி, தத்தாத்திரேயர் குஹைக்குச் சென்று, தமது 52-வது வயதில் கலியுகம் 3941-ம் வருஷத்தில் கைலாயஞ் சென்று சீனர்களாலும், துருஷ்கர்களாலும் பாஹ்லீகர்களாலும் பரமாசார்யராக மதிக்கப்பட்டிருந்த அபிநவ சங்கராசார்ய சரித்திரத்தையும் கலந்து காலதேச வர்த்தமாநங்களை உணராது எழுதப்பட்ட கிரந்தங்களே.
இவைகளன்றியும் ஸ்ரீகாஞ்சீ குருபரம்பரை, ஸ்ரீசிருங்கேரி குருபரம்பரை, ஸ்ரீதுவாரகா குருபரம்பரை, புண்ணிய ச்லோகமஞ்ஜரி, ஸுஷும்னை, சிவரஹஸ்யம், பத்மபுராணம், ஸ்காந்த புராணம், விமர்சம், பதஞ்ஜலி விஜயம், ராஜ தரங்கிணி முதலிய கிரந்தங்களிலும், ஜினவிஜயம், மத்வவிஜயம், மணிமஞ்ஜரி முதலிய அந்நிய மதஸ்தர்களின் கிரந்தங்களிலும் ஸ்ரீஆதி சங்கராசார்யருடைய சரித்திரத்தையும் ஸ்ரீஅபிநவ சங்கராசாரியருடைய சரித்திரத்தையுங் கலந்து எழுதப்பட்ட ஓர் வகை சரித்திரமும் இருக்கின்றது,
ஆகலின் ஸ்ரீமத் ஆதிசங்கராசார்யருடைய திவ்விய சரித்திரத்தைப்பற்றி இங்கு விரிவாய் எழுதுவது அனாவசியமே.