2532ஆவது ஸ்ரீசங்கர ஜயந்தி விசேஷ வெளியீடு – காலடியின் உண்மை வரலாறு…2 (1910 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த கட்டுரையிலிருந்து)
“அவர்களின் (ஸ்ரீசங்கர பகவத்பாதர்களின்) மனத்தின் பெருமையும், ஹ்ருதயத்தின் காம்பீர்யமும், எண்ணத்தின் உறுதியும், விஷயங்களை எடுத்துரைப்பதில் அவர்களின் பக்ஷபாதமின்மையும், அவர்களின் தெளிவான நடையும், இவைகள் ஒவ்வொன்றுமே நமக்கு அவர்களிடத்துள்ள கெளரவத்தை அதிகரிக்கச் செய்கின்றது” என்று விசிஷ்டாத்வைதியான பாஷ்யாசாரியர் என்னும் ஓர் பண்டிதர் (Age of Sankaracharya) *சங்கராசாரியர்காலம்” என்னும் ஆங்கில கிரந்தத்தில் கூறியுள்ளார்.
விஷயங்களை யுள்ளவாறுணர்ந்து தத்துவாராய்ச்சி செய்வதிலும், பூர்வபக்ஷோபந்நியாஸ பூர்வகமாய் நியாயப் பிரமாணங்களைக்கொண்டு ஸித்தாந்தஞ்செய்வதிலும், உள்ளத்திற் கருதியதை யாவருங் கேட்ட மாத்திரத்தில் ஐயந்திரிபின்றி எளிதிலறிந்து கொள்ளும்படி தக்க மொழிகளைக்கொண்டு எடுத்துரைப்பதிலும் இவர்கள் இயற்றிய கிரந்தங்களுக்கு நிகரான கிரந்தத்தை ஸம்ஸ்கிருத பாஷையிலாயினும் மற்ற பாஷைகளிலாயினும் யாம் இதுவரை கண்டதில்லை, இம்மஹான்களுடைய அவதார விசேஷமும், இவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட அத்துவைத தர்சநத்தின் மஹிமையும், இவர்கள் தாம் பூமியில் ஜீவித்திருந்த முப்பத்திரண்டு வயதிற்குள்ளாக இயற்றிய ஸர்வோத்தமமான கிரந்தங்களும், புரிந்த அத்புதமான கிருத்தியங்களும், இவைகள் ஒவ்வொன்றுமே இம் மஹாபுருஷர் ஸ்ரீபரமாத்மாவின் ஓர் விசேஷ அவதாரமென்பதைத் தெள்ளென விளக்கும்.