மாதவ-வித்யாரண்யர்பெயர்க் குழப்பம்

வித்யாரண்யரும் மாதவரும் ஒருவரல்லர் என்று சொல்லும் அறிஞர்கள் முன்வைக்கும் சான்றுகள்:

” வித்யாரண்யரால் ஸ்தாபிக்கப்பட்ட மைஸூர் ராஜ்ய மடங்களில் வித்யாரண்யரைப் பற்றியும், அவருக்கு முன்னும் பின்னும் இருந்த அருளாளர்களைப் பற்றியும் குறிப்பிடும் கல்வெட்டுகள் பல உள்ளன. இவை எவற்றிலும், மாதவரும் வித்யாரண்யரும் ஒருவரே என்று குறிப்பிடவில்லை.

மாதவாசார்யாரையும், அவர் சகோதரரான சாயனரையும் குறிக்கும் சில கல்வெட்டுகளைக் காணும்போது, அவர்களுக்கும் வித்யாரண்யருக்கும். எவ்விதத் தொடர்புமில்லை என்றே கூறவேண்டும்.

மேலும், இவர்களுடைய நூல்களை ஆராய்ந்தாலும், இருவரும் ஒருவரே எனக் கூற முடியாது.

அக் காலத்தில் வாழ்ந்த நூலாசிரியர்களோ, ஒன்றிரண்டு நூற்றாண்டுகளின் பின்னர் வாழ்ந்த ஆசிரியர்களோ இவ்விருவரும் ஒருவர் தாம் எனக் கூறியதாகச் சான்று கிடையாது.

மாதவரைப் பல நூல்கள் எழுதிய சிறந்த ஆசிரியர் என்று சொல்லலாம். ‘பராசர ஸ்ம்ருதி வ்யாக்யம்’ (Parāśara-smţti-vyākhyā), ‘வ்யவஹார மாதவம்’ (Vyavahāra-mādhava), ”காலமாதவம்’ (Kāla-mādhaviya), ‘ முக்தி விவேகம்’ (Jivanmukti-viveka), ‘ஜைமினிய ந்யாயமாலா விஸ்தாரம்’ (Jaiminiya-nyāyamālā-vistara) முதலிய நூல்களை இவர் எழுதியிருக்கிறார். இவரது சகோதரரான சாயனர் (Sāyana) வேதபாஷ்யத்தை (Veda-bhāşya) எழுதியுள்ளார். இருவரும் பெரும் அரசியல்வாதிகளாவர்; இருவரும், விஜயநகர அரசை நிறுவுவதிலும் வளர்ப்பதிலும் பங்குகொண்ட அரசியல்வாதிகள்.

ஆனால், காஞ்சியில் பிறந்த வித்யாரண்யரோ துறவியாக வாழ்ந்து பல அத்வைத மடங்களை கர்நாடகத்தில் ஸ்தாபித்தவராவர் ஆவர். இவர் எழுதியதாக, இரண்டு நூல்களைமட்டுமே கூறமுடியும். அவைகள் ‘பஞ்சதசியும்’, ‘விவரண ப்ரமேய ஸங்க்ரஹமுமே’யாம். வித்யாரண்யர் எந்த சங்கரவிஜயத்தையும் இயற்றினார் அல்லர்.

ஆக, இவ்விருவரும் ஒருவரே என்னும் கூற்றே மிகவும் பிற்காலத்தில் எழுந்ததுதான் என்றும் கூறலாம்.”