ஸ்ரீசங்கர விஜயம் – 5

குருதரிசனம்

பேராசிரியர்

ஆர்.விச்வனாதய்யர், எம்.ஏ., எல்.டி.,

(ஸ்ரீசங்கர ஜயந்தி வெளியீடு)

நர்மதை நதிக்கரையில் மலைக்குகை யொன்றில்

நற்றவ மிருந்தார் ஸ்ரீகோவிந்த பாதர்

நாடினா ரவரை நலமிகு சங்கரர் ;

நற்குரு வாகவே ஏற்கும்எண் ணத்துடன்

சற்குரு சமீபம் சங்கரர் சென்றார்;

நிஷ்டையி லிருந்தார் இஷ்ட கோவிந்தர் ; விரைவாய் நர்மதை வந்தவெள் ளத்தால் விழுங்கியே சென்றது வெகுவாய்க் கிராமங்களை ;

வெள்ளத்தை யுடனே வேகமாய்க் கடத்தில்

உள்ளடக்கி னாரவ் வுத்தமர் சங்கரர்;

அபாயம் நீங்கிய ஆனந்தக் கூத்தில் ஆரவாரித்தனர் அக்கிராம வாசிகள்

நிஷ்டை கலைந்துகண் நோக்கிய கோவிந்தர்

நிர்மல சிரேஷ்டர் நிற்கக் கண்டார்;

உணர்ந்தார் அவர்மகிமை உள்ளம் மகிழ்ந்தார்;

உவகையுட னவரை ஏற்றார் சீடனாய். (5/20)