(ஸ்ரீ காஞ்சீ காமகோடி பீடாதிபதிகள் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்களின் கங்காதி தீர்த்த விஜய யாத்திரை பற்றிய அ.குப்புஸ்வாமி ஐயர் முதலியோரது குறிப்புகளிலிருந்து தொகுத்து வழங்கப்படும் தொடர் – முதற்பகுதி)
ஸ்ரீ பஞ்சானன தர்க்க ரத்ன பட்டாசார்யர்
இவர் தெற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒரு புகழ்வாய்ந்த மஹா வித்வான். பெரும்பாலும் காசீ க்ஷேத்ரத்திலேயே வஸித்துவந்தார். பிரிட்டிஷ் அரசாங்கம் நம் நாட்டை ஆண்டுவந்த காலத்தில், இவரது ஸம்ஸ்க்ருதப் புலமையைப் பாராட்டி, இவருக்கு ‘மஹா மஹோபாத்யாய’ என்ற விருதை வழங்கியது. பின்னர் பிரிட்டிஷ் சர்க்கார் காலத்திய இந்திய சட்டசபை இயற்றிய சட்டங்களைக் கண்டித்து, இவர், தனக்கு வழங்கப்பட்ட ‘மஹா மஹோபாத்யாய’ விருதையும் அதற்குரிய சின்னங்களையும், இந்திய அரசாங்கத்திற்குத் திருப்பி அனுப்பிவிட்டார்.
ஸ்ரீ காஞ்சீ மஹா ஸ்வாமிகள் காசீ க்ஷேத்ரத்திற்கு, 1934-ஆம் ஆண்டில் விஜயம் செய்ததற்கு முன்னரே பட்டாசார்யர் ஸ்ரீஸ்வாமிகளிடம் மிகவும் மதிப்பும், பக்தியுமுள்ளவர்.
ஸ்ரீமஹா ஸ்வாமிகள் காசீ செல்வதற்கு முன்னும், விஜயத்திற்குப் பின்னும், ஆங்குள்ள சிலர் ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடம் சங்கர மடத்தைப் பற்றி துஷ்பிரசாரம் செய்துவந்தனர். இத்தகையவரில் சில வித்வான்கள், ஆதிசங்கரர் நிறுவிய மடங்கள், தேசத்தின் நான்கு மூலைகளிலும் உள்ள நான்கே எனவும் சொல்லி வந்தனர்.
பட்டாசார்யர் இவர்களுக்குத் தக்க பதில் கூறும் வகையில் –
“பஞ்சாயதன பூஜையில், மையத்தில் முக்ய மூர்த்தம் வைத்துப் பூஜிக்கின்றோம். உபாஸனா அக்னி விஷயத்தில், பஞ்சாக்னி என்கின்றோம். ஸ்ரீசக்ர ரூபத்தில் அம்பாளை உபாஸிக்கும்போது மத்தியில் பிந்துஸ்தானம் முக்யமாகக் கருதப்படுகின்றது. இப்படியிருக்க, நான்கு திக்குகளின் கோடியில் மட்டும் ஸ்ரீ பகவத்பாத சங்கரர் மடங்களை ஸ்தாபித்தார் என்பது விசித்ரமாக உள்ளது”, என்ற கருத்தை வெளியிட்டதுடன் நில்லாது, பல பண்டை நூல்களிலிருந்து தகவல்களைச் சேகரித்துச் சங்கரர் ஸ்தாபித்த பல மடங்களில், காஞ்சீ மடம் முக்யமானது என்பதை நிரூபித்து, ஸம்ஸ்க்ருத மொழியில் ஒரு வ்யவஸ்தா பத்ரத்தையும் எழுதி, அதைப் பல வட இந்திய வித்வான்களின் கையொப்பங்களுடன் பிரசுரித்தார்.
காஞ்சீ ஸ்ரீமஹா ஸ்வாமிகள் காசியிலும், கல்கத்தாவிலும் நீண்ட காலம் முகாமிட்டிருந்த போது, பட்டாசார்யர் பெரும்பாலும் ஸ்ரீஆசார்யாளுடைய முகாமுக்கருகிலேயே தங்கியிருந்தார்.
பல நாட்களில் மாலை வேளையில், ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளும் பட்டாசார்யரும், மணிக்கணக்கில் சாஸ்த்ர விசாரம் (ஸம்ஸ்க்ருத மொழியில்) செய்வதைக் கேட்பவர்கள் பிரமித்துப் போவார்கள்.