மாதவ-வித்யாரண்யர்: பெயர்க் குழப்பம் – 2

“மாதவர் தாம் இயற்றிய நூல்களில் முதலாம் புக்க ராஜனையே தம்மை ஆதரித்தவராகக் குறிப்பிடுகிறார். ஆனால், வித்யாரண்யர் தொடர்பான சாசனங்கள் இம்மன்னருக்குப் பின்வந்த இரண்டாம் ஹரிஹரன் காலத்தவை (1377-1404) என அறிகிறோம். வித்யாரண்யர் தமது நூல்களுள் எந்த மன்னரைப் பற்றியாவது குறிப்பிட்டுள்ளாரா? அல்லது அங்ஙனம் குறிப்பிடாமல் தவிர்த்திருப்பின் அதன் வரலாற்றுப் பின்னணி ஆகியனவும் ஈண்டு ஆராயத்தக்கவை.

வித்யாரண்யரைப்பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டுகளில், அவருக்கும் விஜயநகர அரசின் தலைநகராக விளங்கிய விஜய நகரத்துக்கும் எவ்விதத் தொடர்பும் காணப்படவில்லை. இத்தகைய வரலாற்றுக் கற்பனை எந்த மரபு அல்லது மடத்தை ப்ரபலப்படுத்த வேண்டி பரப்பப்பட்டது என்பதும் வெள்ளிடைமலை.

‘விஜயநகரம்’ தொடக்கத்தில் வித்யாநகரம்’ (Vidyānagara’) என்றே அழைக்கப்பட்டு வந்தது.

வித்யாதீர்த்தர் (மாதவரின் குரு) என்பாரின் நினைவாக இப்புதிய நகரத்திற்கு இப்பெயர் வழங்கலாயிற்று.

மாதவரும், அவர் தந்தை முதலியோரும் சங்கம அரச பரம்பரைக்கு ஆசிரியர்களாகவும், மந்திரிகளாகவும் விளங்கினர். சங்கம அரசனின் மகன் மாதவரைத் தலைமை அமைச்சராகக் கொண்டு புதிய அரசை நிலைநாட்டியபோது, மாதவர்தம் ஆசிரியரான வித்யாதீர்த்தரை ஸ்ரீகாஞ்சி காமகோடி மடத்தினின்றும் இங்கு அழைத்து வந்திருக்க வேண்டும்.

இதிலிருந்து விளங்குவது என்ன? வித்யாரண்யரைப் புகழும் எண்ணங்கொண்ட பிற்காலத்தவர்கள், அவர் பல்வேறு நூல்களின் ஆசிரியர் என்று கூறிக்கொள்ள, அவரையும் மாதவரையும் ஒருவர்தாம் எனக் கூறினர்போலும்!”

வரலாற்றாசிரியர்கள் பலரும் தமக்குக் கிடைத்துள்ள சான்றுகளிலிருந்து, மாதவரும் வித்யாரண்யரும் ஒருவரே என்பதை முடிவாகத் தெளிவுசெய்ய முடியாது என்ற கருத்தை மேற்கண்டவாறு வெளியிட்டுள்ளனர்.