கும்பகோணத்துடன் ஸ்ரீபகவத்பாத சங்கரரின் தொடர்பு : ஒரு ஆய்வு (நிறைவுப் பகுதி)

பழம் பெயர்களுடன் புதுக் குடியேற்றங்கள் : சான்றுகள்

இங்கிலாந்திலிருந்து 16-ஆம் நூற்றாண்டு முதல் அமெரிக்க நாட்டில் புதிதாகக் குடியேறியவர்கள் தங்கள் புதுக்குடியேற்றங்களுக்கு, தாங்கள் முன்னர் இங்கிலாந்தில் வசித்த ஊர்களின் பெயர்களைக் கொடுத்துள்ளது, அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் ‘யார்க்’, ‘ப்ளிமத்’, ‘ஹாலி பாக்ஸ்’, ‘போர்ட்ஸ்மத்’ என்ற ஊர்கள் இன்றும் இருப்பதிலிருந்து தெளிவாகும்.

இதேபோல் தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரத்தில் குடியேறினதால் ‘புதூர்’, ‘பேரூர்’ போன்ற பெயர்கள் ஆந்திரத்தில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காலடிக்கருகில் பாயும் நதிக்கு நவீனப் பெயர் ‘ஆல்வாய்’. இந்நதியின் அருகே காலடிக்கு சுமார் 12 மைல்களுக்கு அப்பால் இந்நதியின் பெயரையே கொண்டு ஒரு தொழிற்சிறப்பு நகரம் இன்றும் உள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள மதுரையின் வழியே பாயும் திருவிளையாடற்புராணத்தில் காணப்படும் காரணம் கொண்டு ‘வைகை’ என்றழைக்கப்படும் நதியும், கேரளத்தில் பாயும் ஆல்வாய் நதியும் உற்பத்தியாகும் இடங்கள் ஒரே மலையில் ஒன்றுக்கொன்று மிக அருகில் உள்ளன. வைகை நதிக்கரையில் உள்ள மதுரை மாநகருக்குச் சைவத் திருமுறைகளிலும்,பிறதமிழ் இலக்கியங்களிலும், ‘ஆலவாய்’ என்ற பெயர் உள்ளதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது. ஸம்ஸ்க்ருத நூல்களில் மதுரை ‘ஹாலாஸ்யம்’ என்று கூறப்படுகிறது.

மேலே உள்ள பகுதிகளில் கூறப்பட்டுள்ள விவரங்கள் யாவற்றையும் ஒன்று சேர்த்து, கூர்ந்து கவனித்தால், ‘சிவபுரம்’ முதலிய இடங்களிலிருந்து தமிழர் கேரளத்திற்குக் குடியேறினர் என்பது தெளிவாகும்.