ஸ்ரீஶங்கேஶ்வரம் கரவீரம் மடத்தில் ஒவ்வொரு வருடமும் ரதஸப்தமி அன்று, ஸ்ரீசங்கர பகவத்பாதர்கள் அவர்களின் அருள் வரலாற்றுடன் தொடர்புடையதும், அந்த மடத்தின் காவல் தேவதையுமான மலையாள ப்ரஹ்மா என்னும் ப்ரஹ்மராக்ஷஸுக்குப் பூஜைகள் நடைபெறும்.

இதற்கென, ஹிரண்யகேசி நதிக்கரையில் உள்ள அந்த மடத்தின் தென்புறத்தில் இருக்கும் அஶ்வத்த வ்ருக்ஷத்தின் அடியில் சிவலிங்கத்தை ப்ரதிஷ்டித்து ருத்ராபிஷேகம் செய்து வழிபட்ட பிறகு இதற்கான பூஜைகள் தொடரும்.

ஸ்ரீகரவீர மடத்தின் பழைய வரலாற்றின்படி, ஸ்ரீசங்கரார்ய ஸ்வாமிகள் அவர்கள் மலையாள தேசத்தில் விஜயம் செய்து கொண்டிருந்தபோது, ​​அங்கு ஓரிடத்தில் ஒரு அஶ்வத்த மரத்தில் இருந்த ப்ரஹ்ம ராக்ஷஸ் அவரை வாதிட்டு வெல்ல முயன்றது. அதைத் தோற்கடித்த ஸ்ரீஆசார்யாளின் வாதத் திறன், மதிநுட்பம், புலமை, நேர்மை, தன்னலமற்ற தன்மை போன்ற குணங்களின் கோர்வையைக் கண்டு கொண்ட ப்ரஹ்மராக்ஷஸ் மிகவும் மகிழ்ச்சியடைந்து, ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகளின் பாதங்களில் பணிவுடன் வணங்கி, ‘நான் தங்கள் சேவகன், அருள் கூர்ந்து தங்களுக்கு சேவை செய்ய எனக்கு உத்தரவு பிறப்பிக்கவும்’ என்று பணிவுடன் வேண்டியது.

ஸ்ரீஆசார்யாள் அவர்களும், தாம் நிறுவிய மடங்களை மலையாள ப்ரஹ்மா பாதுகாத்துவர வேண்டும் எனவும், அந்தந்த மடாதிபதிகளும் தமது மடத்தின் காவல் தெய்வமாக அவரை வணங்குவர், என்றும் அருளினார்.

ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாசார்ய ஸ்வாமிகள் அவர்களின் ஆஜ்ஞைப்படி, மடத்தின் காவல் தெய்வமான மலையாள ப்ரஹ்மா வழிபாடு, மடத்தின் பாரம்பரியத்தின்படி தினமும் தொடர வேண்டும். அஶ்வத்த மரத்தினடியில் ருத்ராபிஷேகம் – பூஜை – நைவேத்யம் போன்றவை சிறப்படன் செய்யப்பட வேண்டும்.

1960ஆம் ஆண்டில் ஒரு சமயம் இம்மரம் விழுந்து விட்டதால், மரபு வழக்கப்படி அந்த இடத்தில் ஒரு புதிய அஶ்வத்த மரம் மீண்டும் நடப்பட்டு பூஜைகள் நடந்தேறின.

(ஸ்ரீ கல்யாண் க்ஷேத்ரக் ரதோத்ஸவ புஷ்பம் 1974)