கும்பகோணத்துடன் ஸ்ரீபகவத்பாத சங்கரரின் தொடர்பு : ஒரு ஆய்வு (நிறைவுப் பகுதி)

பழம் பெயர்களுடன் புதுக் குடியேற்றங்கள் : சான்றுகள்

இங்கிலாந்திலிருந்து 16-ஆம் நூற்றாண்டு முதல் அமெரிக்க நாட்டில் புதிதாகக் குடியேறியவர்கள் தங்கள் புதுக்குடியேற்றங்களுக்கு, தாங்கள் முன்னர் இங்கிலாந்தில் வசித்த ஊர்களின் பெயர்களைக் கொடுத்துள்ளது, அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் ‘யார்க்’, ‘ப்ளிமத்’, ‘ஹாலி பாக்ஸ்’, ‘போர்ட்ஸ்மத்’ என்ற ஊர்கள் இன்றும் இருப்பதிலிருந்து தெளிவாகும்.

இதேபோல் தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரத்தில் குடியேறினதால் ‘புதூர்’, ‘பேரூர்’ போன்ற பெயர்கள் ஆந்திரத்தில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காலடிக்கருகில் பாயும் நதிக்கு நவீனப் பெயர் ‘ஆல்வாய்’. இந்நதியின் அருகே காலடிக்கு சுமார் 12 மைல்களுக்கு அப்பால் இந்நதியின் பெயரையே கொண்டு ஒரு தொழிற்சிறப்பு நகரம் இன்றும் உள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள மதுரையின் வழியே பாயும் திருவிளையாடற்புராணத்தில் காணப்படும் காரணம் கொண்டு ‘வைகை’ என்றழைக்கப்படும் நதியும், கேரளத்தில் பாயும் ஆல்வாய் நதியும் உற்பத்தியாகும் இடங்கள் ஒரே மலையில் ஒன்றுக்கொன்று மிக அருகில் உள்ளன. வைகை நதிக்கரையில் உள்ள மதுரை மாநகருக்குச் சைவத் திருமுறைகளிலும்,பிறதமிழ் இலக்கியங்களிலும், ‘ஆலவாய்’ என்ற பெயர் உள்ளதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது. ஸம்ஸ்க்ருத நூல்களில் மதுரை ‘ஹாலாஸ்யம்’ என்று கூறப்படுகிறது.

மேலே உள்ள பகுதிகளில் கூறப்பட்டுள்ள விவரங்கள் யாவற்றையும் ஒன்று சேர்த்து, கூர்ந்து கவனித்தால், ‘சிவபுரம்’ முதலிய இடங்களிலிருந்து தமிழர் கேரளத்திற்குக் குடியேறினர் என்பது தெளிவாகும்.

கும்பகோணத்துடன் ஸ்ரீபகவத்பாத சங்கரரின் தொடர்பு : ஒரு ஆய்வு (இரண்டாம் பகுதி)

காலடி – பெயர்க்காரணம்

ஸ்ரீசங்கரர் பிறந்த ஊருக்குக் ‘காலடி’ எனப் பெயர். இப்பெயர் பிற்காலத்தில் ஏற்பட்ட காரணப்பெயர் எனலாம்.

சிவரஹஸ்யம் போன்ற சில பண்டைய நூல்களில் சங்கரர் பிறந்த ஊருக்கு “சசாலம்” அல்லது “சாலக்கிராமம்’ ” எனப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீசங்கரருக்குப் பகவத்பாதர் என்ற சிறப்புப்பெயர் உள்ளது. இதற்கு ‘ஈசனடி’ என்று பொருள். ஈச்வராம்சமாகப் பிறந்தவரின் அடிச்சுவடு பட்டதால் புனிதம் பெற்றதாலேயே அவ்வூருக்கு ‘காலடி’ என்ற பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும். காலடி என்பதும் ஒரு தமிழ்ப் பெயராகத்தான் தோன்றுகிறது.

சிவபுரத்தில் ஸ்ரீசங்கரரின் மூதாதையர்

ஸ்ரீசிவகுருவின் தகப்பனாரின் முன்னோர்கள் கும்பகோணத்தை அடுத்த சிவபுரவாசிகளாக இருந்திருக்கக் கூடும். அதனாலேயே, ஸ்ரீசிவகுருவின் பெற்றோர்கள் தங்கள் மகனுக்கு, ‘சிவகுரு’, என்று தங்கள் மூதாதையரின் ஊரான குடந்தையை அடுத்துள்ள சிவபுரத்தின் ஈசனார் ஸ்ரீசிவகுருநாதரின் பெயரைச் சூட்டியுள்ளனர். (2/3)

கும்பகோணத்துடன் ஸ்ரீபகவத்பாத சங்கரரின் தொடர்பு : ஒரு ஆய்வு (முதற் பகுதி)

கும்பகோணத்துடன் ஸ்ரீபகவத்பாத சங்கரரின் தொடர்பு : ஒரு ஆய்வு (முதற் பகுதி)

ஸ்ரீபகவத்பாத சங்கராசார்யரின் தகப்பனார் ஸ்ரீசிவகுரு ஆவர். ஸ்ரீசிவகுரு தன் மனைவியுடன் திருச்சிவப்பேரூரில் (தற்காலம் திருச்சூர்) மகப்பேறு வேண்டித் தவம் இருந்தார். அவருடைய ஊர் காலடி என்பதாகும்.

திருச்சிவபுரம்

கும்பகோணத்திற்கு சுமார் மூன்று மைல் தென்கிழக்கில், ‘திருச்சிவபுரம்’ என்ற சிவத்தலம் உள்ளது. இது ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் முதலியோரால் போற்றப் பட்டது. இது மிகப் புராதனக்கோயில். இக்கோயிலில் உள்ள சிவலிங்கத்திற்கு “ஸ்ரீசிவகுருநாதர்” எனப்பெயர். ‘சிவகுருநாதன்’ என்றும் ‘சிவகுரு’ என்றும் பெயர் பூண்ட சைவர்கள் பலர் இன்றும் கும்பகோணத்திலும், அதன் சுற்றுப்பகுதியிலும் உளர்.

கேரளத்தில் தமிழர் குடியேற்றம்

ஸ்ரீபரசுராமர் தென்னாட்டை அடைந்து, கேரளத்தில் தமிழர் பலரைக் குடியேற்றுவித்தார் எனச் சொல்லப்படுகிறது. பிற்பாடு கி.மு. 6-ஆம் நூற்றாண்டின் முன்னரே கேரளத்திற்கு தமிழர்கள் பெருமளவில் சென்று குடியேறினர் என ஊகித்தறியப்பாலது.

இன்னும் சிவபுரத்தைச் சுற்றியும், காலடியையும், திருச்சிவப்பேரூரையும் சுற்றியுள்ள பகுதிகளிலும் மாத்தூர், சேதினீபுரம், சந்திரசேகரபுரம், *கருக்குடி, கண்டியூர் என ஒரேவிதமான பெயர்களைக் கொண்ட பல ஊர்கள் உள்ளன.

(*கும்பகோணத்தை அடுத்த மருதாநல்லூருக்கு கருக்குடி என்னும் பழம் பெயர் உண்டு. கேரளத்தில் இருக்கும் கருக்குடி, காலடிக்கு சமீபமாக உள்ள அங்கமாலிக்கு அடுத்த கருக்குட்டி என்ற ரயில் நிலையம் ஆகும்.)

(1/3)