ஸ்ரீசங்கர விஜயம் — 9

ஸ்ரீசங்கர விஜயம் மண்டனமிச்ர விஜயம் பேராசிரியர் ஆர்.விச்வனாதய்யர், எம்.ஏ., எல்.டி., (ஸ்ரீசங்கர ஜயந்தி வெளியீடு)

திக்விஜயம் செய்த தீரர் சங்கரர்
திகழுயர் சீடர் சிலபே ருடனே
கர்மமார்க் கத்தைக் கனதீ விரமாய்க் கையாண்டு வந்த மண்டன மிச்ரர்
மிளிர்ந்த பட்டணம் மாகிஷ் மதிக்கு
வந்தே அவரை வாதுக் கழைத்தார்;
சாக்ஷாத் சரஸ்வதி தேவியே யங்கு
ஸரஸ வாணியெனும் பெயர்ப்பெண் மணியாய்
மண்டன மிச்ரரின் மனைவியாய் விளங்கினாள்
ஈண்டிவர் வாதத்தைக் கண்டு களிக்கவே
வேண்டினர் அவளை நியாயம் வழங்கி
வெற்றி தோல்வி விளித்துக் கூற ;
தன்நிலை யறிந்த தேவி யவளும்
உன்னிப் பார்த்தோர் உபாயம் செய்தாள்;
மங்கை யிரண்டு மாலைகள் கொணர்ந்து
அங்கவ ரிடமே அளித்துச் சொன்னாள்;
மலர்மாலை தனையே மார்பி லணிந்து
புலவர் நீவீர் தொடங்குவீர் வாதம் ;
தோற்றவர் மாலை துவண்டு வதங்கும்,
ஏற்போம் அதனை நாம் இறுதிமுடி வாக
மதிவாண ரிருவரும் மனமுவந் தங்கே
விதிப்படி வெகுநாள் வாதம் நடத்தினர்;
மண்டன மிச்ரரின் மாலை வாடவே
கண்டனள் சரஸ வாணியு மதனை ;
“என்றன் கணவருக்கு யானோர் அடிமை,
என்னையும் ஜயிப்பது உமக்கே கடமை;
அதில்நீர் தவறினால் அவரை வென்றது
மதிக்கத்தகா” தெனமாதவள் உரைத்தாள், (9/20)