மநீஷா பஞ்சகம் இயற்றியது பேராசிரியர் ஆர்.விச்வனாதய்யர், எம்.ஏ., எல்.டி., (ஸ்ரீசங்கர ஜயந்தி வெளியீடு)
கங்கா நதியின் கரைபுரள் நீரில்
சங்கரப் பெரியோன் சதுர்பெற ஆடித்
தனிப்பெரு வீதியில் தாம்வரும் போது
நனிப்பெரு நாய்கள் நான்கி னுடனே
சண்டாள னொருவன் வழியில் நின்றான்;
கண்டா ரவனை ; கனவழி நீங்க
விண்டார் விமலர் சங்கர பாதர்;
வெருண்ட வவனும் வெகுண்டு நோக்கி,
“தெருண்ட நும்முப தேசம் நன்றுநன்று!
எல்லாம் இறைவ னென்றே அறைவீர்!
சொல்லா மதுவு மென்பா லன்றோ!
நானு மிறைவனே போவதேன் தூரம்!
ஏனு மெனக் கென்ன வுரைப்பீர்!” என்றே வினவ,
இறைவர் ஆய்ந்து, ஐந்து சுலோக மழகுட னமைத்து
மைந்தர் வாழ மநீஷா பஞ்சகம்
என்றப் பெருநூ லவனுக் கருளி,
”ஆன்ம ஞானி யெவனுமென் னாசான் ;
யான்வ ணங்கு மடிகளு மவனே” என்று கூற, ஏதிலன் மறைந்தான் ;
நன்றே காசி நாதன் தோன்றினன்.(7/20)