ஸ்ரீசங்கர விஜயம் – 3

ஸ்ரீசங்கர விஜயம்

பேராசிரியர்

ஆர்.விச்வனாதய்யர், எம்.ஏ., எல்.டி.,

(ஸ்ரீசங்கர ஜயந்தி வெளியீடு)

கனகதாரா ஸ்தவம் இயற்றியது

குருகுல வாசம் செய்யுமந் நாளில்

ஒருசிறு சம்பவம் நிகழ்ந்தது கேளீர்;

அந்தணர் ஒருவர் அவர்மிக ஏழை,

உஞ்ச விருத்தியில் உயிர்வாழ்ந்து வந்தார்;

பிரம சரிய முறையின் படியே

நிர்மல சங்கரர் பிக்ஷை யேற்க

அந்தணர் இல்லம் அருகில் நின்றார்;

வந்தனள் மறையோன் மனையாம் நங்கை

பவப்பிணி நீக்கும் பாலன் முகத்தைத் தவப்பெரும் பயனால் கண்டு களித்தாள்;

அவசர மாகவே அகமெங்கும்

ஓடினாள் ;

பிக்ஷைய ளிக்கப் பக்ஷணம் ஒன்றும்

தக்ஷணம் காணாது தவியாய்த் தவித்தாள்;

நெல்லிக் கனியொன்று கையிற் கிடைத்ததை

மெல்லியல் அன்புடன் இட்டனள் பிக்ஷையாய்

அய்யன் கண்டான் அவள்தன் அன்பை; மெய்யான கருணை மிகக்கொண்டான் உடனே;

அந்தணர் தம்பதியை ஆட்கொண்ட வறுமையை

அப்பொழுதே போக்கிட ஆர்வம் கொண்டான்.

மனத்திலே நினைந்தான் மகாலக்ஷ்மி யன்னையை

கணமதே சொரிந்தான் கனகதா ராஸ்தவம்

தங்கக் கனிகள் பொழிந்தன அங்கே ; பொங்கிய செல்வம் பொலிந்தது இல்லம்.(3/20)