பேராசிரியர்
ஆர்.விச்வனாதய்யர், எம்.ஏ., எல்.டி.,
(ஸ்ரீசங்கர ஜயந்தி வெளியீடு)
மூன்றாம் வயசு முழுதும் நிரம்புமுன் சான்றோன் சங்கரன் பாஷைபல பகர்ந்தான்;
ஐந்தே ஆண்டுகள் கடக்கும் முன்னமே மைந்தனும் கற்றான் சாத்திர மனைத்துமே ;
இந்த நிலையில் தந்தை சிவகுரு
மைந்தனை விட்டு மண்ணுலகு நீத்தார்;
தனித்து நின்ற தாய்ஆர் யாம்பிகை
தனயன் தனக்குத் தந்தையு மானாள் ;
உரிய காலத்தில் உறவினர் உதவியால்
உபநயனம் செய்வித் துள்ளம் மகிழ்ந்தாள் ;
வேதாப் பியாசம் விதிப்படி செய்யவும் வேண்டிய பலப்பல வசதிகள் செய்தாள்;
மாதாவே தெய்வமென மதித்தார் சங்கரர்;
வேதாக மங்கள் ஒதுவது மானார் ;
அன்னையிடம் சங்கரர்க் களவற்ற அன்பு;
அன்பினால் அவர்செய்த அற்புத மனந்தம் ;
நோய்வாய்ப் பட்ட தாயவள் நதிக்குப்
போய்வர இயலாப் பொழுதினி லங்கே
ஆற்றைத்தம் இல்லத்தின் அருகே வாவென
ஆஞ்ஞா பித்தார் அன்னைக்கு உதவ; செல்வனின் ஆணைக்குச் செவிசாய்த் தந்நதி
தெள்ளென ஓடியது வீட்டுவா சலிலே. (2/20)