பகவத்பாதாப்யுதயம் : நூல் அறிமுகம்

ஸ்ரீசங்கர சரிதம், அவரது திக்விஜயம் பற்றி விவரிக்கும் பல்வேறு பழம் நூல்களின் தொகுப்பான “பகவத்பாதாப்யுதயம் என்னும் சிறந்த நூலை, பிரஸித்த கவியும், பண்டிதருமாக விளங்கிய மஹாமஹோபாத்யாய லக்ஷ்மணஸூரி அவர்கள் இயற்றினார். இவர் துங்கா ச்ருங்கேரி ஆசார்யரான ஸ்ரீந்ருஸிம்ஹ பாரதீ ஸ்வாமிகளின் ப்ரிய சிஷ்யர் ஆவர்.

இந்நூல் 1927ஆம் ஆண்டில் ஸ்ரீரங்கம் வாணீ விலாஸ அச்சகத்தில் அச்சிடப் பெற்றது.

திவான்பகதூர் கே. எஸ். ராமஸ்வாமி சாஸ்திரியார் இதற்கு முகவுரை எழுதியுள்ளார். “மனித உலகத்திலேயே சிறந்தவர் ஸ்ரீசங்கர பகவத்பாதர். அதற்கேற்ப இக்காலத்தில் கவிகளில் சிறந்தவர் ஸ்ரீ லக்ஷ்மணஸூரி அவர்கள். இவர் இந்தக் காவியத்தை எழுதியது மிகவும் பொருத்தமானது” என்று நூலின் முகவுரையில் ஸ்ரீ ராமஸ்வாமி சாஸ்திரிகள் சொல்கிறார்.

ஸ்ரீ லக்ஷ்மணஸூரி அவர்கள் பல உயர்ந்த காவியங்களை எழுதிப் பெயர் பெற்ற கவியாகத் தென்னகத்தில் விளங்கினார். இவருடைய சிறந்த இலக்கிய ஸேவையை மெச்சி ஆங்கிலேய அரசு மிக உன்னதமான ‘மஹாமஹோபாத்யாயர்’ என்ற பிருதத்தை இவருக்கு வழங்கியது.

எளிய நடையில் அழகான ஸம்ஸ்கிருதச் சொற்களைக் கொண்டு இக் காவியத்தை ஸ்ரீலக்ஷ்மணஸூரி இயற்றி உள்ளார். இதில் உள்ள விசேஷம் யாதெனில், கவி தமது அபிப்பிராயமாகவே காவியத்தை எழுதாமல், மிகப் பழமையான சங்கர விஜயங்களை எல்லாம் பார்த்து ஆராய்ந்து, தாம் சொல்லும் விஷயங்களுக்கு அந்தப் பழைய நூல்களின் ஆதாரங்களையும் காண்பித்திருக்கிறார் என்பதே.

பல உயர்ந்த சங்கரவிஜய கிரந்தங்களைப் பார்த்து ஆராய்ந்து, ‘இவற்றுள் ஆனந்தகிரீய சங்கர விஜயம் மட்டுமே முக்கியப் பிரமாணக் கிரந்தம்’ என்பதைத் தீர்மானித்தால்தான், அதிலிருந்து பல மேற்கோள்களைக் காட்டியுள்ளார் துங்கா ச்ருங்கேரி ஆசார்யரின் ப்ரிய சிஷ்யரான இக்கவி.

காஞ்சியில் ஸ்ரீஆசார்யாள் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டையும் ஸ்ரீமட ஸ்தாபனமும் செய்ததையும் இந்நூலில் ஐயத்துக்கு இடமின்றித் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீசங்கர சரித்திரத்தை ஆராய்கிறவர்கள் ஸ்ரீ லக்ஷ்மணஸூரி அவர்கள் இயற்றிய இந்தக் காவியத்தை வாசித்துத் தெளிவடையலாம்

ஸ்ரீலக்ஷ்மணஸூரி அவர்களுடைய புத்திரரே துங்கா ச்ருங்கேரி மடத்தின் சிறந்த பக்தராகிய முன்னாள சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஸ்ரீ T.L.வெங்கட்ராம ஐயர் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.