ஸ்ரீசங்கர விஜயம் – 4

ஸ்ரீசங்கர விஜயம்

பேராசிரியர்

ஆர்.விச்வனாதய்யர், எம்.ஏ., எல்.டி.,

(ஸ்ரீசங்கர ஜயந்தி வெளியீடு)

துறவு

மகனுக் கோர்மணம் செய்வித்து மகிழ மனத்திற் கொண்டாள் மாதா ஆர் யாம்பிகை;

சங்கர ரோவெனில் சந்நியாசம் ஏற்கச் சந்தர்ப்ப மொன்றைச் சடுதிகைக் கொண்டார்;

தாயும் மகனும் தனிநீ ராடுகையில்

சேயின் காலையோர் முதலை பிடித்தது;

அலறினாள் தாயும், அழுது துடித்தாள்; பதறினாள் அங்கே பயமிகக் கொண்டு ;

“சந்நியாச ஆச்ரமம் சங்கரன் ஏகற்கு

அன்னை விடைதந்தால் அகலும் சங்கடம்;

கவலைப் படாதீர் கண்ணீர் விடாதீர்; முதலையின் வாக்கிது முடிவைச் சொல்லுவீர்”

எனவே பகர்ந்தார் இளைஞர் சங்கரர் ;

“அப்பா மகனேஎன் அருமைச் செல்வமே!

இப்போ துனைநான் பிரிந்தெங்ஙன் வாழ்வேன்?

உன்னைத் தவிர உறுதி வேறுண்டோ?

தன்னந் தனியாய்த் தவிக்கவே விடாதே!”

என்று வருந்தினாள் ஏங்கியே தாயும்;

ஒன்றிய தாயின் சொற்கேட்டுச் சங்கரர்

“வருந்தாதீர், அம்மா! வேறுதுணை இலையென;

அருந்தவப் பயனும் அவலமே யாகாது; அன்னைக் குரிய அந்திக்கன் மங்களைச் சொன்ன முறைப்படி நிச்சயம் செய்வேன்;

சன்மார்க்க வழியில் சந்நியாசம் ஏற்கச்

சடுதியி லெனக்கு விடைதந் திடுவீர்”

எனவே புகல, மனமிளகித் தாயும்

புத்திரன் பிழைத்தால் போதுமென் றெண்ணி

உத்தரம் தந்தாள் உதவினள் துறவு. (4/20)