ஸ்ரீசங்கரபகவத்பாதர்களும் ஹிந்துமத ஒற்றுமையும்.. 2

ஒரே ஸத்வஸ்து பல பேதங்களையும் பெயர்களையும் அடைய வேண்டுமென்றால் அது எப்படி முடியும் ? என்பதையும் ஸ்ரீபகவத்பாதர் விளக்குகிறார். ஒரே ப்ரஹ்மம் நிர்குணம் ஸகுணம் என்று இரண்டாக உள்ளதனால், உலக ஸம்பந்தம் வரையில் ஸகுணமாகும் ; தனி ஸ்வரூபத்தில் நிர்குணமாகும் என்பதை, பாஷ்யம் முதலான கிரந்தங்களில் நிலைநாட்டியுள்ளார். இவ்வாறே ஸாங்க்ய நையாயிக தர்சனங்களை அலசிப் பார்த்தால் இவை எல்லாவற்றையும் உள்ளடக்கித் தனியாகப் பிரகாசிப்பது அத்வைதம்தான் என்பதையும் கிரந்தங்களின் வாயிலாகப் பல பிரபல பிரமாண யுக்திகளுடன் நிலைநாட்டியுள்ளார். இவ்வாறான பெருமுயற்சிகள் எல்லாமே ஹிந்துமத ஒற்றுமையை ஸ்தாபிப்பதற்குத்தான் என்பதில் ஐயமில்லை.”ஒன்றைக் கண்டுபிடிப்பதற்காகவும் எல்லா வழிகளிலும் ஒன்றைப் பார்ப்பதற்காகவுமே வாழ்க்கையை அர்ப்பித்தவன் என்று ஸ்ரீசங்கர பகவத்பாதர் தம்மைத் தைத்திரீய உபநிஷத் பாஷ்யத்தில் கூறிக் கொள்ளுகிறார். ” यन्मां एकयोगिनं अनेकयोगिप्रतिपक्षिणमात्थ । ஒற்றுமையை நாடும் என்னை வேற்றுமையில் ஈடுபடும் பலரின் எதிரியாக இருப்பதாகக் கூறுகிறீர்கள் ” என்கிறார்.ஸ்ரீசங்கரபகவத்பாதர் காட்டிய இந்த மனப்பான்மையை, இக் காலத்தில் உள்ள எல்லா மதத்தினரும் பின்பற்ற வேண்டும். அவருடைய மற்ற கொள்கைகளை ஒப்புக்கொள்ளாதவர்களுங்கூட இந்த ஒற்றுமை மனப்பான்மையைப் பின்பற்ற வேண்டுகிறோம்.(நன்றி: ஸ்ரீகாமகோடி ப்ரதீபம், 1969 )